யாப்பு

புங்குடுதீவு-மடத்துவெளி நாச்சிமார் ஆலயம் என அழைக்கப்பட்ட புங்குடுதீவு-மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய பரிபாலன சபை யாப்பு


1. பெயர்புங்குடுதீவு-மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய (வயலூா் முருகன்) பரிபாலன சபை

2. விலாசம்மடத்துவெளி, புங்குடுதீவு-7, வடமாகாணம், இலங்கை

3. அலுவலகம்ஆலயத்தின் காரியாலயம்

4. பரிபாலனசபையின் நோக்கங்கள்:

4.1 மேற்படி ஆலயத்தினை பரிபாலனம் செய்தல்.

4.2 எமது கிராமக்களினதும் அவர்களின் வழித்தோன்றல்களினதும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்தல்.

4.3 ஆலயத்தின் நித்திய நைமித்திய பூசைகள், அபிஷேகங்கள், விசேட விழாக்கள், மகோற்சவம் மற்றும் பொதுப்பயன்பாட்டுக்கு உகந்த வேறு சமய நிகழ்ச்சிகளையும் நிறைவேற்றுதல்.

4.4 ஆலயத்திற்குரிய அசையும், அசையா ஆதனங்களையும் அவற்றின் ஆவணங்களையும் பாதுகாத்தல், பராமரித்தல் மேலும் தேவையானவற்றை அபிவிருத்தி செய்தல்.

4.5 ஆலயத்தின் அசையும், அசையா ஆதனங்களில் இருந்தும் வேறு மூலதனங்களில் இருந்தும் இயலுமான அளவு வருமானத்தை கிரமமாக அறவிடுதல்.

4.6 ஆலயத்தின் வளர்ச்சிக்காக திருப்பணி வேலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுதல்.

4.7 ஆலயத்தின் மண்டபங்களையும், கிணறுகளையும், சுற்றுப்புறச் சூழலையும், சுத்தமாகப் பேணி பாதுகாத்தல்.

4.8 சைவசமயத்தின் வளர்ச்சி சம்பந்தமான கலை, கலாச்சார, இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தலும், ஊக்குவித்தலும்.

4.9 ஆலய மண்டபத்தை சைவசமய நிகழ்ச்சிகளுக்கும், கிராம அபிவிருத்திக்கும் சமய ஆசாரப்படி பாவிப்பது பற்றி உறுதி செய்தல்.

4.10. எமது கிராமத்தினதும், ஆலயத்தினதும் நலனில் அக்கறையுள்ள வேறு அமைப்புகளுடன இணைந்து மேற்படி நோக்கங்களை நிறைவு செய்தல்.

5. அமைப்பு

1. பொதுச்சபை

2. தர்மகர்த்தா சபை

3. பரிபாலன சபை

6. பொதுச்சபை உறுப்பினர்களுக்கான தகைமைகள்:

6.1. புங்குடுதீவு-மடத்துவெளி கிராமத்தில் (07 வட்டாரம் மற்றும் 08 வட்டாரம்) வசிப்பவர்களும், வசித்தோர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உறுப்பினராக இருக்கலாம்.

6.2. பதினெட்டு (18) வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் உறுப்பினராகலாம்.

6.3 வருடச்சந்தா ரூபா100/= அல்லது ஆயுள் சந்தா ரூபா10,000/= செலுத்தியவராக இருத்தல் வேண்டும்.

6.4 வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நடைபெற இருக்கும் நாளுக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன் சந்தா பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் பங்குபற்றவும், வாக்களிக்கவும் உரிமையுடையவர்கள் ஆவர்.

7.  பொதுச்சபையின் கடமைகளும், அதிகாரங்களும்:

7.1. ஆலயத்தின் வளர்ச்சிக்காகப் பொருளுதவி, சரீர உதவிகளைச் செய்தல்.

7.2. பரிபாலனசபையை தெரிவு செய்தல்.

7.3. தேவையான நேரங்களில் பொதுக் கூட்டத்தில் பங்குபற்றி பரிபாலன சபைக்கு ஆலோசனைகளையும், பணிப்புரைகளையு ம் வழங்கி ஊக்குவித்தல்.

7.4 வருடாந்த வரவு-செலவு கணக்குகளை அங்கீகரித்தல்.

7.5 கணக்காய்வாளர், தேவையேற்படின் மதிப்பாய்வு சபை ஆகியவற்றை தெரிவு செய்தல்.

7.6 தேவையானபோது பரிபாலனசபைக்கு புறம்பாக ஆலய அபிவிருத்திக்கான குழுக்களை நியமித்தல்.

7.7 பரிபாலனசபை உறுப்பினர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் மற்றும் அவசர தேவைகள் சம்பந்தமாக தீர்மானிப்பதற்கு பொதுச்சபையின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறையாத தொகையினரின் எழுத்து மூலமான கோரிக்கையின் பேரில் விசேட பொதுச்சபை கூட்டம் கூட்டப்படலாம்.

7.8 பரிபாலனசபையின் பதவிக்காலம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் பொதுக்கூட்டத்தை கூட்டத் தவறின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறையாத எண்ணிக்கையுடன் கூடி புதிய பரிபாலனசபையை அமைக்கலாம்.

8. வருடாந்தப் பொதுக்கூட்டம்

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 31ந் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் ஆண்டுப் பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

9. பொதுக்கூட்ட நிறைவு எண் (கோரம்)

மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறையாத எண்ணிக்கை அல்லது 15 அங்கத்தவர்கள் இதில் எது குறைவோ அதுவே நிறைவு எண் ஆகும்.

10. பொதுக்கூட்ட அறிவித்தல்

வருடாந்தப் பொதுக்கூட்டம் 21 நாட்கள் முன்னறிவித்தலுடனும், விசேட பொதுக்கூட்டம் 07 நாட்கள் முன்னறிவித்தலுடனும் கூட்டப்படல் வேண்டும்.

11. பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்

பரிபாலனசபையின் அங்கீகாரத்துடன் செயலாளரால் தயாரிக்கப்படல் வேண்டும். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படாத விடயங்களை சபையின் அனுமதியின்றி விவாதிக்க முடியாது. வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் தற்காலிக தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரது தலைமையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறுதல் வேண்டும்.

12. தர்மகர்த்தா சபை

12.1 திருவிழா உபயகாரர்களும், ஆலயத்தின் தோற்றத்திற்கு வழிசமைத்தவர்களும் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களாக கருதப்படுவர்.

12.2 பரிபாலன சபை தர்மகர்த்தா சபைக்கு கட்டுப்பட்டதாகும்.

12.3 பரிபாலன சபை உறுப்பினர்கள் மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

13. பரிபாலன சபை

13.1 பரிபாலன சபை தலைவர், உப தலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர் மற்றும் பரிபாலன சபை அங்கத்தவர்கள் உட்பட அதிக பட்சம் பதினொரு (11) அங்கத்தவர்களை கொண்டதாக இருக்கும்.

13.3 பொதுச்சபையிலிருந்து மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் போஷகர்களாக தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இவர் பரிபாலன சபைக்கு ஆலோசனை வழங்குபவராக இருப்பார்.  

14. பரிபாலன சபை உறுப்பினர்களுக்கான தகைமைகள்:

14.1 மேற்படி ஆலய பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.

14.2 இருபத்தியொரு (21) வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

14.3 தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் யாவரும் ஆலயத்தின் அக்கறையில் முரண்பாடான அக்கறை உள்ளவர்களாகவோ அல்லது முரண்பாடான அக்கறை உள்ள இன்னொரு அமைப்பில் அங்கத்தவம் வகிப்பவராகவோ இருத்தல் ஆகாது.

14.4. வேறொரு ஆலயத்தின் பரிபாலன சபையில் பிரதான பதவிகளில் (தலைவர், செயலாளர், பொருளாளர்) அங்கத்துவம் வகிப்பவர்கள் ஆலய பரிபாலன சபையின் பிரதான பதவிகளில் அங்கத்துவம் வகிக்க முடியாது.

14.5. ஆலயத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக பதவியில் இருப்பவர்கள் பரிபாலன சபையில் அங்கத்துவம் வகிக்க முடியாது.

 14.6. பரிபாலன சபையின் மிகப்பொறுப்பு வாய்ந்த பதவியான தலைவர் பதவியில் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது

15. பரிபாலன சபையின் கடமைகளும், அதிகாரங்களும்:

15.1. இவ்வுபவிதியின் 4ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அமைவாக ஆலயத்தை நிர்வகித்து நடாத்திச் செல்லுதல்.

15.2. ஆலய அபிவிருத்தி செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைபடுத்தல்.

15.3. பொதுமக்களிடம் நிதி திரட்டி அங்கீகரிக்கப்பட்ட விடயங்களுக்குச் செலவு செய்தல்.

15.4. ஆலயத்தின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

15.5. ஆலயத்தின் தேவைக்கேற்ப நிரந்தர, தற்காலிக குருமார்கள், பூசகர்கள் ஏனைய பணியாட்கள் போன்றோரை நியமித்தல், அவர்களை கட்டுப்படுத்தல், அவர்கள் மேல் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்தல், அவர்களின் வேதனங்களை நிர்ணயித்தல்.

15.6. ஆலய செலவினங்களை அங்கீகரித்தல்.

15.7. மாதாந்த வரவு-செலவுகளை அங்கீகரித்தல்.

15.8. ஆலயத்திற்குச் சொந்தமான விற்பனைக்குரிய அசையும் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்தலும், அசையும் அல்லது அசைவற்ற ஆதனங்களை வாடகைக்கு விடுதலும்.

15.9. யாப்பின் 16ஆவது விதிக்கமைய இடைநடுவில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல்.

15.10. இவை தவிர பொதுச்சபையினரால் அங்கீகரிக்கப்படும் ஏனைய பணிகளைச் செய்தல்.

16.  பரிபாலன சபையின் ஆயுட்காலம்

தெரிவு செய்யப்பட்ட பரிபாலன சபை ஒரு வருடத்திற்கு மட்டும் சேவையாற்றும்

17.  பரிபாலன சபை உறுப்பினர்கள் பதவி விலகலும், இழத்தலும்:

17.1. தமது சொந்த விருப்பத்தின்படி ஒருவர் பதவி துறந்தால், அல்லது இறந்தால் அல்லது தொடர்ச்சியாக மூன்று பரிபாலன சபை கூட்டங்களுக்கு அனுமதியின்றி சமூகமளிக்காதிருத்தல் அல்லது ஆலய நலனுக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் காரணமாக தர்மகர்த்தா சபையால் பதவி விலக்கப்பட்டால் ஏற்படும் வெற்றிடத்திற்கு பொதுச்சபையிலிருந்து வேறு ஒருவரை பரிபாலன சபை தெரிவு செய்யலாம்.

17.2. தமது சொந்த விருப்பத்தின்படி ஒருவர் பதவி விலகி செல்வதானால் குறைந்தது ஒரு மாத கால முன்னறிவித்தலாவது பரிபாலன சபைக்குக் கொடுத்தல் வேண்டும்.

18. பரிபாலனசபைக் கூட்டங்கள்:

18.1. குறைந்தது இரு மாதங்களுக்கு ஒரு முறை அங்கத்தவர்களின் வசதியான திகதியில் கூட்டம் கூட்டப்படல் வேண்டும்.

18.2. பரிபாலன சபை கூட்ட அறிவித்தல் குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னராவது உறுப்பினர்களுக்கு அனுப்பப்படல் வேண்டும்.

18.3. விசேட பரிபாலன சபைக் கூட்டம் தலைவர் அல்லது செயலாளர் அல்லது நான்கு பரிபாலன சபை உறுப்பினர்களின் எழுத்து மூலமான வேண்டுதலினால் எப்பொழுது ஆயினும் தேவையேற்படுமிடத்து இரண்டு நாள் முன்னறிவித்தலுடன் கூட்டப்படலாம்.

19. பரிபாலன சபைக் கூட்ட நிறைவு எண் (கோரம்)

மொத்த உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களாக இருக்கும்.

20.  பரிபாலன சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரல்

செயலாளரால் தயாரித்து சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படாத விடயங்களை சபையின் அனுமதியின்றி விவாதிக்க முடியாது.

21. பரிபாலன சபை உறுப்பினர்களின் கடமைகளும், பொறுப்புக்களும்:

() தலைவர்

பொதுச்சபையினதும், பரிபாலன சபையினதும் மிகப்பொறுப்பு வாய்ந்த பதவி இதுவாகும். எனவே இவர் ஒழுக்க சீலராகவும், ஆசாரமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

21.().1. பொதுச்சபை, பரிபாலன சபை ஆகிய கூட்டங்களுக்குத் தலைமை வகித்து நடாத்துதல்.

21.().2. ஆலய விதிகளுக்கமைவாக ஆலய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து நிர்வகித்தல்.

21.().3. தேவையேற்படும்போது பரிபாலன சபை கூட்டங்களைக் கூட்டு வித்தல்.

21.().4. கூட்டங்களை தொடர்ந்து நடாத்த முடியாதபோது அவற்றை ஒத்திவைத்தல் அல்லது கலைத்தல்.

21.().5. ஆலய நலனுக்கு முரண்படாத வகையில் அவசரமானதும், அவசியமானதுமான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களைத் தனது தற்றுணிபின்படி எடுத்துவிட்டு பின்னர் அதனை பரிபாலனசபைக்கு தெரிவித்து அனுமதி பெறுதல்.

21.().6. செலவின் உறுதிச்சீட்டுக்களைச் சான்றுப்படுத்தல்.

21.().7. அறுதியிடும் வாக்கு:

பொதுச்சபை, பரிபாலன சபைக் கூட்டங்களில் சில தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சபையினர் சமநிலையாக இருபகுதியாக, பிரிந்துள்ளபோது தலைவர் தனது அறுதியிடும் மேலதிக வாக்கை பயன்படுத்தலாம்.

() உபதலைவர்

21.().1. தலைவருக்கு உதவியாக இருந்து செயற்படல்.

21.().2. தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரின் கடமைகளை ஏற்றுச் செய்தல்.

() செயலாளர்

21.().1. உபவிதியில் குறிப்பிட்ட கால அவகாசங்களைக் கொடுத்து பொதுச்சபை, பரிபாலன சபை கூட்டங்களை கூட்டுதல்.

21.().2. சகல கூட்ட அறிக்கைகளையும் தயாரித்து அவற்றினை அடுத்து வரும் கூட்டங்களில் சமர்பித்துச் சபையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளுதல்.

21.().3. அங்கத்தவர் வரவு இடாப்பு பேணுதல்.

21.().4. பொதுச்சபை அங்கத்துவப்பட்டியல் ஒன்றை வைத்திருந்து அதனைக் காலத்துக்குக்காலம் புதிப்பித்து வருதல்.

21.().5. சபையின் கடிதப் போக்குவரத்துகளுக்குப் பொறுப்பாக இருத்தல்.

21.().6. கூட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்தல்.

21.().7. ஆலயத்தின் பெயரில் வெளியிடப்படும் வெளியீடுகளுக்கு பொறுப்பாக இருத்தல்.

21.().8. பொதுச்சபை உறுப்பினர்களினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை முறையாக ஒரு பதிவேட்டில் பதிந்து அவற்றை பரிபாலன சபையின் கவனத்திற்கு கொண்டு வருதல்.

21.().9. செலவின் உறுதிச் சீட்டுக்களைச் சான்றுபடுத்தல்.

21.().10. வேண்டப்படும் சந்தர்ப்பங்களில் காசோலைகளில் கையெழுத்திடுதல்.

() உபசெயலாளர்

21.().1. செயலாளருக்கு உதவியாக இருந்து செயற்படல்.

21.().2. செயலாளர் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரின் கடமைகளை ஏற்றுச் செய்தல்.

() பொருளாளர்

இவர் ஆலயத்தின் சகல நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்து செயற்படுபவர்.

21.().1. ஆலயத்திற்கு சேர வேண்டிய வருமானங்களைப் பெற்று அவற்றிற்குப் பற்றுச்சீட்டுக் கொடுத்தல்.

21.().2. ஆலயம் சம்பந்தமான செலவுகளை முறையான அதிகாரத்தின் மீது கொடுப்பனவு செய்து அவற்றின் சான்றுபடுத்தப்பட்ட உறுதிச் சீட்டுக்களைக் கோவைப்படுத்தி வைத்திருத்தல்.

21.().3. ஆலய வரவு-செலவு விபரங்களை அதற்குரிய பதிவேட்டில் பதிந்து வைத்திருத்தல்.

21.().4. மாதாந்த பரிபாலனசபை கூட்டத்திலும், வருடாந்த பொதுச்சபை கூட்டத்திலும் ஆலய வரவு-செலவு விபரங்களை வெளியிடுதல்.

21.().5. கணக்காய்வாளருக்குத் தேவையான கணக்கேடுகளையும், பதிவேடுகளையும் மற்றும் பிற சேவைகளையும் அளித்து அவரின் கடமையினை நிறைவேற்ற உதவுதல்.

21.().6. பொருளாளர் வசம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ரூபா 5000/= க்கு மேற்படாத தொகையை மட்டும் கையிருப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு மேலதிகமாக வைத்திருக்க வேண்டுமானால் பரிபாலனசபையின் அனுமதி பெறப்படல் வேண்டும்.

21.().7. ரூபா 5000/= க்கு மேற்படும் சேகரிப்புத் தொகைகள் உடனுக்குடன் வங்கியில் ஆலய நடைமுறை அல்லது சேமிப்பு கணக்கில் வைப்பு செய்யப்படுதல் வேண்டும்.

21.().8. சில்லறைச் செலவுகள் மற்றும் நானாவிதச் செலவுகளுக்காக பொருளாளர் தனது தற்றுணிபின்படி ரூபா 1000/= வரையுமே செலவு செய்ய முடியும்.

21.().9. பற்றுச்சீட்டுப் புத்தகங்கள், அர்ச்சனைச்சீட்டுக்கள், உறுதிச்சீட்டுக்கள், காசோலைப் புத்தகங்கள், வங்கிக்கணக்குக் கூற்றுக்கள் மற்றும் நிதிசார்பான பதிவேடுகள் யாவும் இவர் பொறுப்பில் இருக்கும்.

21.().10. இவர் பதவியினை விட்டு விலகும் பொழுது தன்னிடமுள்ள காசு மற்றும் ஆவணங்களைப் புதிய பொருளாளரிடம் சமர்ப்பித்து அவர் அவற்றை பெற்று கொண்டமைக்கான ஒரு பற்றுச்சீட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

22. நிதியாண்டு

ஆலயத்தின் நிதியாண்டு ஒரு வருடமாகும். இது சித்திரை மாதம் 01ம் திகதியில் (ஆங்கிலத் திகதி) இருந்து பங்குனி மாதம் 31ந் திகதி வரையும் ஆகும்.

23.  நிதிக்கட்டுப்பாடுகள்

23.1. வருமானங்களை அறவிடுதல்

சகல பரிபாலனசபை உறுப்பினரும் தனித்தும், ஒருமித்தும் வருமானங்களைத் தவறாது அறவிடுவதற்குப் பொறுப்பாளிகளாவர்.

23.1.(). உண்டியல் பணம்

உண்டியலுக்கு இரண்டு பூட்டுக்கள் போடப்பட்டு ஒரு பூட்டின் திறப்பு பொருளாளரிடமும் மற்றைய பூட்டின் திறப்பு தலைவர் அல்லது செயலாளரிடமும் இருத்தல் வேண்டும். உண்டியல் சேர்வுப்பணம் பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் மற்றும் வேறு ஒரு பரிபாலனசபை உறுப்பினர் முன்னிலையில் கணக்கு எடுக்கப்பட்டு பொருளாளரால் உடன் பற்றுச்சீட்டு எழுதப்பட்டு ஆலய நிதியுடன் சேர்க்கப்படல் வேண்டும்.

23.1.(). அர்ச்சனை சீட்டுப்பணம்

காலத்துக்குக் காலம் பரிபாலனசபையின் சிபார்சுப்படி பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் அர்ச்சனை சீட்டுப் பணம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கிணங்க அறவிடப்படல் வேண்டும்.

23.1.(). குத்தகை மற்றும் வாடகைப்பணம்

அசைவற்ற ஆதனங்களிலிருந்து பெறப்படும் குத்தகை அல்லது வாடகைப்பணம் காலத்துக்குகாலம் வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

23.2. திருப்பணி நிதி

பொதுச்சபையாலோ, பரிபாலனசபையாலோ அவ்வப்போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்க உள்ளுரிலோ, பிற ஊரிலோ அல்லது பிற நாடுகளிலோ வதியும் எமது கிராம மக்களிடம் இருந்தும், அரச அல்லது அரச சார்பாற்ற பொதுநல ஸ்தாபனங்களிடம் இருந்தும் விசேட திருப்பணிகான நிதியை சேகரிக்கலாம். இதன் பொருட்டுத் தேவையானபோது விசேட திருப்பணிச்சபை ஒன்றை பொதுச்சபையினர் ஏற்படுத்தலாம்.

23.3. வைப்பு நிதியம்

ஆலயத்தின் எதிர்கால நலனையும், வளர்ச்சியையும் முன்னிட்டு நிரந்தர வைப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தி அந்நோக்கத்திற்காக எமது கிராம பொதுமக்களிடமிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் எமது கிராம மக்கள் மற்றும் வழித்தோன்றல்களிடமிருந்தும் பெறும் பணத்தை அரசாங்க சேமிப்பு வங்கியில் அல்லது வணிக வங்கியில் நிலையான வைப்புக் கணக்கிலிட்டு அதிலிருந்து பெறும் வட்டியை மட்டும் ஆலய நித்திய பூசை மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

23.4. செலவினங்கள்

ஆலய செலவினங்கள் பின்வருமாறிருக்கும்.

(). நித்திய, நைமித்திய பூசைச் செலவுகள்.

(). குருமார்கள், பூசகர்கள் மற்றும் ஏனைய பணியாட்கள் வேதனம் அல்லது படித்தரம்.

(). அசைவுள்ள, அசைவற்ற சொத்துக்கள் பராமரித்தல் செலவுகள்.

(). பொதுச்சபையால் அல்லது பரிபாலனசபையால் ஆலய நலனுக்கு அல்லது சைவசமய அபிவிருத்திக்கு அவசியமானது என தீர்மானிக்கும் இதர செலவுகள்.

23.4.1. மேற்படி நோக்கங்களுக்காக ரூபா 1000/= க்குட்பட்ட செலவுகள் பொருளாளரினால் செலவிடப்பட்டு விபரம் அடுத்துவரும் பரிபாலனசபை கூட்டத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும்.

23.4.2. ரூபா 1000/= க்கு மேற்பட்ட செலவுகள் பரிபாலனசபையின் முன்கூட்டிய அனுமதியின்றி பொருளாளரால் செலவிட முடியாது.

23.4.3. பரிபாலனசபையால் வேறு வகையாக தீர்மானிக்கப்பட்டாலன்றி ரூபா 1000/= க்கு மேற்பட்ட சகல செலவினங்களும் காசோலை மூலமே செய்யப்படுதல் வேண்டும்.

23.4.4. சகல செலவினங்களுக்கான உறுதிச்சீட்டுக்களும் தலைவர் அல்லது செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் சான்றுபடுத்தப்பட்டால் மட்டுமே செல்லுபடியானதாக இருக்கும்.

23.4.5. ஆலய மகோற்சவ காலங்களுக்கு மட்டும் பரிபாலனசபை தீர்மானத்திற்கு இணங்க மேற்படி கட்டுபாடுகள் தளர்த்தப்படலாம்.

24. வங்கிக்கணக்கு

அரச சேமிப்பு வங்கியில் அல்லது வணிக வங்கியில் நடைமுறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கினை ஆலயத்தின் பெயரில் பரிபாலனசபையின் தீர்மானப்படி வைத்திருக்கலாம். வங்கி நடைமுறைக் கணக்குகளில் காசோலைகளில் கையெழுத்து இடுவதற்கு பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் கையொப்பமிடல் வேண்டும்.

25. கணக்காய்வாளர்

கணக்காய்வுத்துறையில் அனுபவம் உடைய ஒருவர் பொதுச்சபை கூட்டத்தில் கணக்காய்வாளராகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இவரது பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும்.

() கணக்காய்வாளரின் கடமைகள்:

25.().1. பொருளாளரால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு விபரங்களைப் பொருத்தமான பற்றுச்சீட்டுக்கள், உறுதிச்சீட்டுக்கள், பதிவேடுகள், மற்றும் இதர ஆவணங்களுடன் பரிசீலித்தல்.

25.().2. பரிபாலனசபையின் அனுமதியின்றிச் செய்யப்பட்ட செலவினங்களை பொதுச்சபைக்கு அறிக்கையிடல்.

25.().3. உபவிதிக்கு முரணான செயற்பாடுகளை பொதுச்சபையினரின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.

25.().4. வருமானங்கள் சரிவரப் பெற்றுக் கொள்ளப்பட்டமையை உறுதி செய்தல்.

25.().5. ஆலயத்தின் அசையும், அசையாச் சொத்துக்கள் சார்பான மதிப்பாய்வுச் சபையின் அறிக்கையினைப் பெற்று மதிப்பாய்வு செய்தல்.

25.().6. வரவு-செலவு அறிக்கை வெளியிடுவதற்கு முன் அதிலுள்ள விடயங்களை வெளியிடாதிருத்தல்.

25.().7. வரவு-செலவு அறிக்கையுடன் தனது கணக்காய்வு அறிக்கை ஒன்றையும் பொதுச்சபைக்குச் சமர்ப்பித்தல்.

26. சொத்து மதிப்பாய்வுச் சபை

பொதுச்சபைக் கூட்டத்தில் மூவர் கொண்ட ஒரு மதிப்பாய்வுச் சபையை ஏற்படுத்த வேண்டும். சொத்துக்கள் யாவும் குறைந்தது இச்சபையின் இரு அங்கத்தவர்கள் முன்னிலையிலாவது ஆய்வு செய்யப்படுதல் வேண்டும்.

இச்சபை ஆலயத்தின் சகல அசையும், அசையாச் சொத்துப் பதிவேட்டின்படி அவற்றின் உரிமை, உடைமைப் பெறுமதி ஆகியவை பற்றிப் பரிசீலித்து பொதுச்சபைக்கு அறிக்கையிடல் வேண்டும்.

27. திருவிழா பூசை ஒழுங்கு முறைகள்:

26.1. சிவாச்சாரியார் தவிர்ந்தோர் முருகனுக்குப் பூச்சொரிதல், பன்னீர் தௌித்தல், விபூதி, சந்தனம், தீர்த்தம் வழங்கல் தவிர்க்கப்படல் வேண்டும்.

26.2. வருடாந்த உற்சவங்கள், அபிஷேகங்களின்போது வசந்த மண்டபத்தில் இருந்து சுவாமி வீதி உலாவுக்கு ஆயத்தமாகும்போது நிறை தேங்காய் அடிப்பது விழா உபயகாரர்களை சார்ந்ததாகும்.

27. யாப்பு திருத்தமும், உபவிதிகளும்

27.1. இந்த யாப்பு விதியில் காட்டாதொழிந்த எந்த விடயங்களையும் எடுத்தாள பொதுச்சபைக்கு அதிகாரம் உண்டு.

27.2. இந்த யாப்பு விதியை திருத்தம் செய்ய முடியாது. காலத்தின் தேவை கருதி புதிய விதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவையேற்படும் பட்சத்தில் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  சட்டமேலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுதல் வேண்டும்

27.4. இதற்கு முன்னர் நிலவி வந்திருக்கக் கூடிய மேற்படி ஆலயத்தின் யாப்பு விதிகளும், உபவிதிகளும் இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றன.

(மேற்படி யாப்பு 07.04.2024 ந்திகதி நடைபெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.)